நேட்டோ அமைப்புக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக, நேட்டோ பிராந்தியத்தின் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ள நாடு ஒன்றிற்கு 4,000 இராணுவ வீரர்களை அனுப்ப ஜேர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது.
லிதுவேனியா நாட்டுக்குச் சென்றுள்ள ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Boris Pistorius லிதுவேனியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது திடீரென போர் தொடுத்தபோது, அந்த விடயம், ரஷ்யாவின் அருகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்கமுடியாது.
அவ்வகையில், ரஷ்யாவுக்கு அருகில் அமைந்துள்ள நேட்டோ உறுப்பு நாடான லிதுவேனியாவையும் ரஷ்யா தாக்கலாம் என்பதால், அப்படி ஏதாவது தாக்குதல் நிகழ்ந்தால் லிதுவேனியாவை பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்களை தயாராக நிறுத்த இருப்பதாக ஜேர்மனி அந்நாட்டுக்கு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், தற்போது லிதுவேனியா நாட்டுக்குச் சென்றுள்ள ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Boris Pistorius, நேட்டோ அமைப்பின் கிழக்கு ஓரத்தை வலுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் அமைந்துள்ள நாடான லிதுவேனியாவுக்கு 4,000 ஜேர்மன் இராணுவ வீரர்களை அனுப்ப ஜேர்மனி விரும்புவதாக தெரிவித்தார்.
அவர்களை அங்கேயே நிரந்தரமாக தங்கவைக்கவும் ஜேர்மனி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே லிதுவேனியாவில் நேட்டோ படையினர் 1,660 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 780 பேர் ஜேர்மன் இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment