ஜெனிவா- ஐநா சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு

kailasa

இந்தியா – கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார்.

அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்ததோடு அந்த நாட்டுக்கான தனி கொடி, தனி பாஸ்போர்ட், ரூபா நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

மேலும் சமீபகாலமாக கைலாசா நாடு பல்வேறு வெளிநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணைதள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியாகின.

அந்த வகையில் சமீபத்தில் கைலாசா நாட்டை அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததாக கூறி அதுதொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 22ம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான குழுவின் கூட்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மா விஜயபிரியா நித்யானந்தா, கைலாசா லாஸ்ஏஞ்சல்ஸ் தலைவர் மா முக்திகா ஆனந்தா, கைலாசா செயிண்ட் லூயிஸ் தலைவர் மா சோனா காமத், மா நித்யா ஆத்மநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர். முன்னதாக கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து அதனை வழிபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

#world #India

Exit mobile version