காசா மக்கள் மழை நீரை குடிக்கும் அவலம்
பாலஸ்தீனின் காசாவில் கனமழை பெய்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மழை நீரை சேகரித்து குடிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் ஐ.நாவின் தங்குமிடங்களிலும், தற்காலிக தங்குமிடங்கள் அமைத்தும் தங்கள் நாட்களை கடந்து வருகின்றனர்.
இந்நிலையில் மழைக்காலங்களில் காசாவில் பரவும் நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மற்றும் அவற்றில் போதிய வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையில் காசாவில் கனமழை வேறு பெய்து வருவதோடு இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காசாவில் இதே நிலை நீடித்தால், சுகாதார வசதிகள் மற்றும் தாங்க முடியாத குளிர் ஆகியவற்றினாலும் மக்கள் உயிரிழக்கும் மோசமான நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.