தென்கொரியாவில் கிளர்ச்சியைத் தூண்டியமை மற்றும் சட்டவிரோதமாக இராணுவச் சட்டத்தை (Martial Law) அமுல்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024, டிசம்பர் 3-ஆம் திகதி நள்ளிரவில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த யூன் சுக் இயோல், நாட்டில் திடீரென அவசரகால இராணுவச் சட்டத்தைப் பிறப்பிப்பதாக அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளை முடக்கி, பாராளுமன்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவரது திட்டமாக இருந்தது.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் மிகத்தீவிரமான போராட்டங்களினாலும், சட்ட ரீதியான நகர்வுகளினாலும் சில மணிநேரங்களிலேயே இந்த இராணுவச் சட்ட அமுலாக்கம் முறியடிக்கப்பட்டது.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தனது தீர்ப்பில், ஜனாதிபதி என்ற உயர் பதவியிலிருந்து கொண்டு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைச் சிதைக்க முயன்றமை மற்றும் கிளர்ச்சியைத் தூண்டியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தோல்வியுற்ற இராணுவச் சட்ட முயற்சியைத் தொடர்ந்து, யூன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்பட்டு (Impeached) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். தென்கொரிய வரலாற்றில் ஒரு ஜனாதிபதி இத்தகைய குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை பெறுவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அந்நாட்டின் ஜனநாயகப் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.