அமெரிக்காவின் வடக்கு கரோலினா (North Carolina) மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பினால் திட்டமிடப்பட்டிருந்த பாரிய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினரால் (FBI) மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், இந்தச் சதித் திட்டத்துடன் தொடர்புடைய 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகப் புலனாய்வுத் துறை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
மத்திய புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் காஷ் படேல் (Kash Patel) இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் “எமது பாதுகாப்புப் பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுத்த துரித மற்றும் ஒருங்கிணைந்த பணிகளின் மூலம், இந்தத் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி இன்று பல அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.”
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.