சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

image 64d1628410

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹோம்ஸ் நகரின் வாடி அல்-தஹாப் (Wadi al-Dahab) பகுதியில் அமைந்துள்ள இமாம் அலி பின் அபி தாலிப் பள்ளிவாசல் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதி அலவைட் (Alawite) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடமாகும்.

நண்பகல் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்த இந்த விபரீதத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிவாசலுக்குள் வெடிகுண்டுகள் முன்கூட்டியே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகச் சிரியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை. தாக்குதல் நடந்த பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக தேடுதல் மற்றும் புலனாய்வுப் பணிகளைச் சிரிய பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

Exit mobile version