சிரியாவில் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்! போராட்டத்தில் குதித்த கிறிஸ்தவர்கள்
சிரியாவில் வீதியோரம் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் எரிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மத்திய சிரியாவின் சுகைலாபியா(Suqaylabiyah) நகரில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் தீ மூட்டி எரிக்கப்படுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து, சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் வெடித்துள்ளது.
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்தி எழுச்சிக்கு தலைமை தாங்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், சிரியாவில் மத மற்றும் இன சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மரத்தை தீ மூட்டுவதற்காக முகமூடி அணிந்தவர்கள் மரத்தில் திரவமொன்றை ஊற்றுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.