சிலி நாட்டில் காட்டுத்தீ ருத்ரதாண்டவம்: 18 பேர் உயிரிழப்பு – 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்!

WhatsApp Image 2026 01 19 at 14.13.35

தென் அமெரிக்க நாடான சிலியில் (Chile) பரவி வரும் கடும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நிலமை மோசமடைந்து வருவதால் அந்நாட்டு ஜனாதிபதி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

தீயில் கருகி இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. சுமார் 20,000 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே 500 கிமீ தொலைவில் உள்ள உபிள் (Ñuble) மற்றும் பயோபியோ (Biobío) ஆகிய மாகாணங்களில் தீ மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.

காட்டுத்தீயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் பாதிக்கப்பட்ட இரண்டு பிராந்தியங்களில் சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் (Gabriel Boric) “பேரழிவு நிலை” (State of Catastrophe) என அறிவித்துள்ளார்.

வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீயணைப்பு வீரர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய காடுகளில் இருந்து வெளியேறும் கடும் புகை மூட்டத்தால் அப்பகுதியே இருண்டு காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலி நாடு சமீபகாலமாகப் பருவநிலை மாற்றத்தால் இவ்வாறான தொடர்ச்சியான காட்டுத்தீ விபத்துகளைச் சந்தித்து வருகிறது. இதற்கு முன்னர் வால்பரைசோ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் உயிரிழந்தது ஒரு கறுப்பு வரலாறாகக் கருதப்படுகிறது.

 

 

Exit mobile version