இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிக்காக காத்திருக்கும் உலக நாடுகள்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
இதேவேளை சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அனுப்பியுள்ளது.
இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டர் கலன் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதையும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.
தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறும் ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும்.
அங்கு விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்ஞான் ரோவர் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளித் திட்டங்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும்.
இந்நிலையில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகளும் காத்திருப்பதற்கு முக்கிய காரணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் நகர்வு மற்றும் செயற்பாட்டு தரவுகளானது பெங்களூர் தொலைத்தொடர்பு மையத்திலிருந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஏழு பிரம்மாண்ட தொலைத்தொடர்பு மையங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக தகவல்கள் பெறப்பட்டும் அனுப்பப்பட்டும் வருகிறது.
சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்படும் போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இதற்கான தகவல் தொடர்பு உதவிகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது.
பூமி கோள வடிவம் கொண்டது என்பதால் நிலவை நோக்கி இந்தியா இருக்கும் போது மட்டும் தான் இந்திய தகவல் தொடர்பு மையங்களால் சந்திரயான்-3 லேண்டருடன் சுலபமாக எந்தவொரு இடையூறுமின்றி தகவல் தொடர்புகளை வைத்துக்கொள்ள முடியும்.
இதே நிலவின் மறுப்பக்கம் இந்தியா இருக்கும் போது இந்திய தகவல் தொடர்பு மையங்களால் மிக எளிதாக சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது.
எனவே உலகின் பல பகுதிகளில் உள்ள பிரமாண்ட ஆண்டனாக்களின் உதவியை பயன்படுத்தி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்ந்து சுலபமாக தகவல் தொடர்பு வைத்து வருகிறது.
இந்த சந்திரயான்-3 திட்டத்தின் கீழ், ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், கயானா, ஆவுஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாசாவின் தகவல் தொடர்பு நெட்வொர்க் ஆண்டனாக்களின் உதவியை இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது துல்லியமான தகவல் தொடர்பு தேவைப்படும் என்பதால் அவுஸ்திரேலியாவின் நியூ நோர்ச்சியா ஆண்ட்டனாக்கள் சந்திரயான்-3 உடன் தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த 3 நாட்களுக்கு அவுஸ்திரேலியாவின் நியூ நோர்ச்சியா ஆண்ட்டனாக்கள் நிலவில் உள்ள சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பில் இருக்கும் என தகவல் தெரியவந்துள்ளது.
சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும். இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.
இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும். ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.
நிலாவின் தரையில் இறங்கிவிட்ட இந்த 26 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் ரோவர், நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில் அது அங்குள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும்.
மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும்.
அதாவது சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.
இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால் தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கும் என கூறப்படுகின்றது.
நிலாவில் என்ன ஆராய்ச்சி செய்யப்படும்?
நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும். ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும்.
அதன்மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும். அதோடு நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது.
இந்த அலைமாலை கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும்.
அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும்.
அவற்றைத் தெரிந்துகொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நிலவை மனிதர்கள் மற்ற கோள்களுக்கு விண்வெளி பயணம் மேற்கொள்ளும்போது ஒரு தளமாக பயன்படுத்தக்கூட உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment