அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு Visa Integrity Fee என்ற புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கட்டணம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட பயணிகள் 250 டொலர் கட்டணம் செலுத்த நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நியூயார்க் மற்றும் புளோரிடா செல்லும் பிரித்தானிய பயணிகள் கவலைப்பட வேண்டாம் என்றே கூறுகின்றனர்.
ஏனெனில் பிரித்தானியாவிலிருந்து செல்லும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அக்டோபர் 1ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த திட்டமானது குடியேற்றம் அல்லாத விசா தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்தக் கட்டணம் வழக்கமான விசா விண்ணப்பம் மற்றும் பிற விசா செலவுகளுடன் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ESTA திட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும் பிரித்தானியர்கள் புதிய இந்த திட்டத்தால் பாதிக்கப்படமாட்டார்கள்.
ESTA திட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கும் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது. ESTA திட்டத்தினூடாக 90 நாட்கள் வரையில் வணிகம் அல்லது சுற்றுலாவிற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி அமெரிக்காவிற்கு பயணப்பட முடியும்.
ESTA திட்டத்திற்கான கட்டணமாக 21 டொலர் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ESTA திட்டமின்றி, F-1 மற்றும் M-1 மாணவர்கள் விசா, H-1B, L-1 மற்றும் O-1 பணி விசா, மேலும் ESTA வரம்பான 90 நாட்களுக்கு மேல் தங்கியிருப்போரும் இந்த 250 டொலர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அத்துடன் சிறப்பு விசா வகைகளுக்கு விண்ணப்பிப்பவர்களும் கூட இந்த 250 டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.