ஈரான் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே நேரடிப் பொறுப்பு என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த கமேனி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஒரு “குற்றவாளி” என வர்ணித்தார்.
“இந்தக் கிளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் வித்தியாசமானது. ஏனெனில் இதில் அமெரிக்க ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்,” என அவர் குறிப்பிட்டார்.
ஈரானில் நடக்கும் இரத்தக் களரி மற்றும் அழிவுகளுக்கு வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்புடைய நபர்களே காரணம் என்றும், அவர்கள் கடந்த இரண்டு வாரங்களில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றுள்ளதாகவும் கமேனி சுட்டிக்காட்டினார்.
ஈரானின் நீண்டகால எதிரிகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், போராட்டக்காரர்களைக் களத்தில் இருந்து வழிநடத்தி நாட்டை நிலைகுலையச் செய்ய முயற்சிப்பதாக ஈரான் அதிகாரிகள் கருதுகின்றனர்.
நாட்டை ஒரு முழு அளவிலான போருக்குள் இழுத்துச் செல்வதைத் தவிர்க்க விரும்புவதாகக் கூறிய கமேனி, அதேவேளையில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என எச்சரித்தார்.
“நாங்கள் நாட்டைப் போருக்குள் இழுத்துச் செல்ல மாட்டோம். ஆனால் உள்நாட்டு அல்லது சர்வதேச குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படாமல் தப்பிக்க விடமாட்டோம்.”
ஈரானின் இந்தத் தீவிர நிலைப்பாடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவும் புவிசார் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.