ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கமேனியின் உரையில், ஈரானில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழலையும் மக்கள் போராட்டங்களையும் வொஷிங்டன் (அமெரிக்கா) தூண்டிவிடுவதாக அவர் ஈரானிய அரசு ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்தார்.
வரலாற்றில் பார்வோன் (Pharaoh), நிம்ரோத் மற்றும் ஈரானின் முன்னாள் மன்னர் முகமது ரேசா ஷா போன்ற அகங்கார ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோதே வீழ்ந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
உலகையே ஆணவத்துடன் மதிப்பிடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தகைய கொடுங்கோலர்களின் வரலாற்றைப் பாடமாகக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஈரானில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதாரத் தடைகளால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதில் ஈரான் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இது ஒரு “வெளிநாட்டுச் சதி” என்ற ரீதியிலான கருத்துக்களை ஈரான் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். கமேனியின் இந்தப் பேச்சு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகலை மேலும் அதிகரித்துள்ளது.