திருக்குறளை உலகறியச் செய்தவருக்கு கனடாவில் உருவச்சிலை: முதல்வர் மு.கா.ஸ்டாலின் பெருமிதம்
திருக்குறளை உலகறியச் செய்த ஜி.யு. போப்பிற்கு (George Uglow Pope) கனடாவில் உருவச்சிலை அமைக்கப்பட்டதை குறித்து பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
ஜி. யு. போப் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி அளப்பரியது. அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஆவார்.
தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
அவரது மொழிபெயர்ப்பு உன்னதமான மொழிபெயர்ப்பாக இன்றும் போற்றப்படுகின்றது. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பன்னிரெண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
அவரது அரிய இப்பணி, தமிழ் மொழியை தமிழர் அல்லாதவர்களிடமும் கொண்டு சேர்த்தது. போப் ஐயர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர், ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றினார்.
அதன் பின்பும், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் (oxford) பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தார்.
1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, அப்போது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஜி.யு. போப் தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அவரது முழு உருவச்சிலையை நிறுவி அவரது புகழுக்கு பெருமை சேர்த்தது.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு வரும் எங்கள் திராவிட அரசு, தமிழ் இலக்கிய நூல்களை, பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக ஜி.யு.போப் பெயரில் விருது வழங்கியும் சிறப்பித்து வருகிறது.
இம்முயற்சியை முன்னெடுக்கின்ற கனடியத் தமிழர் பேரவைக்கும், கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
1 Comment