ஆயிரக்கணக்கான மக்கள் முன் புறக்கணிக்கப்பட்ட சிறுமி
அயர்லாந்துக் குடியரசில், ஆயிரக்கணக்கானோர் முன் ஒரு கருப்பினச் சிறுமி புறக்கணிக்கப்படும் காட்சி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அயர்லாந்தில் நடைபெற்ற தடகளப்போட்டிகளின்போது, வெற்றி பெற்ற ஒரு அணிக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அப்போது, வரிசையாக அந்த அணியிலுள்ள சிறுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்துவந்த அலுவலர் ஒருவர், வரிசையில் நின்ற ஒரு கருப்பினச் சிறுமிக்கு மட்டும் பதக்கம் அணிவிக்கவில்லை.
அந்த கருப்பினச் சிறுமியைத் தாண்டிச் சென்று, அவளுக்கு அடுத்து நிற்கும் வெள்ளையினச் சிறுமிக்கு பதக்கம் அணிவிக்கிறார் அந்தப் பெண் அலுவலர்.
தனக்கு மட்டும் ஏன் பதக்கம் அணிவிக்கப்படவில்லை என அந்தக் குழந்தை குழம்பிப் போய் நிற்பதையும், பெரியவர்களுக்குத்தான் இந்த பாகுபாடெல்லாம், நாங்கள் குழந்தைகள், எங்களுக்கு நட்புதான் பெரிதென்பதுபோல, அவள் அருகில் நிற்கும் மற்றொரு வெள்ளையினக் குழந்தை, உனக்கு மட்டும் ஏன் பதக்கம் அணிவிக்கப்படவில்லை என அக்கறையுடன் விசாரிப்பதையும் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
அமெரிக்க கருப்பின தடகள வீராங்கனையாகிய Simone Biles, அந்த வீடியோவைக் கண்டு தன் இதயம் நொறுங்கிப் போனதாகக் கூறி, அதை இணையத்தில் பகிர, அந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
அயர்லாந்தின் தடகள அமைப்பு, சம்பந்தப்பட்ட அலுவலர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரியதாகவும், பின்னர் அந்தச் சிறுமிக்கு தனியாக பதக்கம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், அந்தச் சிறுமியின் தாய், அயர்லாந்து தடகள அமைப்பு முறைப்படி மன்னிப்புக் கோர தவறிவிட்டதாகக் கூறி, சுவிட்சர்லாந்திலுள்ள தடகள நெறிமுறை அமைப்பிடம் புகாரளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தங்கள் மகள் கருப்பினச் சிறுமி என்பதாலேயே அவள் புறக்கணிக்கப்பட்டதாக தாங்கள் நம்புவதாக அந்தச் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.