நடுவானில் பறந்த விமானத்தில் 70 பயணிகளால் பரபரப்பு
ஜேர்மனி(Germany) நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த 70க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொரிஷியஸ்(Mauritius) தீவிலிருந்து ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நோக்கி 290 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தது Condor நிறுவனத்தின் விமானம் ஒன்று நடுவானில் பயணித்துக் கொண்டிருந்தவேளை, பயணிகளில் சிலர் திடீரென ஒவ்வொருவராக வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த விமானத்தை செலுத்திய பெண் விமானி இத்தகைய சூழல்களைக் கையாளும் பயிற்சி பெற்றிருந்ததால், அவர்களை ஜேர்மனிக்குக் கொண்டு செல்வது பாதுகாப்பானது என முடிவு செய்து பிராங்க்பர்ட் விமான நிலையத்துக்கு விமானத்தைக் கொண்டு சென்றுள்ளார்.
விமானம் விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருக்கும்போதே, முன்கூட்டியே தகவலளிக்கப்பட்டதால், விமான நிலையத்தில் மருத்துவ உதவிக்குழுவினர் தயாராக காத்திருக்க, உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விமானத்தில் பயணித்த பயணிகள் மட்டுமே நோய்க்கிருமி ஒன்றின் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதாவது, விமானத்தில் வழங்கப்பட்ட உணவை உண்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.