இந்தியா
இந்தியாவுக்கான நிதியுதவி : அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்(donald trump) அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி (narendra modi)அமெரிக்கா சென்ற நிலையிலும் அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயற்பாடு நிறுத்தப்படவில்லை. இந்தியர்களை ஏற்றிய அமெரிக்காவின் இரண்டாவது விமானம் பஞ்சாபில் தரையிறங்கியது. அதேபோன்று இந்தியாவிற்கு அடுத்த இடியாக அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொழிலதிபர் எலோன் மஸ்க்(elon musk) தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டொலர் நிதியையே இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அமெரிக்க வரிசெலுத்துவோரின் டொலர்கள் பின்வரும் வகைகளுக்கு செலவிடப்பட இருந்தன. அவை அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன.” என்று குறிப்பிடப்பட்டு ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில், மோல்டோவா நாட்டுக்கான 22 மில்லியன் டொலர் மற்றும் இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கான 21 மில்லியன் டொலர் உட்பட பல்வேறு நாடுகளுக்கான நிதி நிறுத்தம் விவரம் இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று நிதி நிறுத்தப்பட்டுள்ள நாடுகளின் விபரம் வருமாறு
வங்கதேசத்தில், அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்கு 29 மில்லியன் அமெரிக்க டொலர். நேபாளத்துக்கான பல்லுயிர் பாதுப்புக்கான 10 மில்லியன் டொலர். லைபீரியாவுக்கான 1.5 மில்லியன் டொலர். மாலி நாட்டுக்கான 14 மில்லியன் டொலர் தெற்கு ஆபிரிக்காவுக்கான 2.5 மில்லியன் டொலர் ஆசியாவுக்கு கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கு 47 மில்லியன் டொலர் நிதி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன.