உலகம்
ஆரம்பமாகிய வர்த்தகப் போர்: அமெரிக்காவுக்கு கனடா பதிலடி

கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமும் அதன் பொருளாதார மையமுமான ஒன்டாரியோ மாகாண நிர்வாகமானது, பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள அரசாங்க ஒப்பந்தங்களை ஏலம் எடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.
மேலும் அமெரிக்க வரி அதிகரிப்பு திட்டத்திற்கு பதிலடியாக எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் உடனான ஒப்பந்தத்தை கைவிட்டுவதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் “கனடாவின் பொருளாதாரத்தை அழிக்கத் துடிக்கும் மக்களுடன் வணிகம் செய்ய முடியாது” என ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் எக்ஸ் தளத்தில் பதிவென்றை வெளியிட்டுள்ளார்.
கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக, டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து கனடா மற்றும் மெக்ஸிகோ மீது 25 சதவீத வரியும், சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பில், கடந்த சனிக்கிழமையன்று ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த வரிக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமெரிக்காவில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும், மெக்ஸிகோ மற்றும் சீனாவும் இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளன.
வட அமெரிக்க நாடுகளாகிய கனடா மற்றும் மெக்ஸிகோ அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.
கனடாவும் மெக்ஸிகோவும் அமெரிக்காவுடன் நீண்ட எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த இரு நாடுகளும் (கனடா மற்றும் மெக்ஸிகோ) தங்கள் எல்லைகளை வலுப்படுத்தவில்லை என்றும், சட்டவிரோதமாக குடியேறிகளை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கின்றன என்றும் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும், ஃபென்டனில் போதை மருந்து, கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவிற்கு வருவதாகவும் ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகிறார்.