இந்தியா – கனடா ராஜதந்திர போர்:மோடிக்கும் ட்ரூடோவுக்கும் கிடைக்கும் அரசியல் பலன்கள்
இந்தியாவிலும் கனடாவிலும் இருந்து ராஜதந்திரிகள் பரஸ்பர முறுகல் காரணமாக வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் மூலம், இரு நாட்டு பிரதமர்கள் குறுகிய காலத்தில் அரசியல் ரீதியாக பலனடையக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் முக்கிய செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில் மேற்கண்ட விடயம் கூறப்பட்டுள்ளது.
கனடாவின் வசித்த ஒரு சீக்கிய தலைவரின் கொலையில், இந்திய இராஜதந்திரிகளை தொடர்புபடுத்தி, ஆறு இந்திய இராஜதந்திரிகளை கனடா வெளியேற்றியது.
இதற்கு பதிலாக ஆறு கனேடிய இராஜதந்திரிகளை வெளியேறச் சொல்லி இந்தியா பதிலடி கொடுத்தது.
இந்த நடவடிக்கைகள், இருதரப்பு உறவுகளை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றாலும்,நரேந்திர மோடியும் ஜஸ்டின் ட்ரூடோவும் இது தொடர்பில் அதிகம் கவலைப்பட வாய்ப்பில்லை என்று ஜப்பான் டைம்ஸ் கூறியுள்ளது.
பொதுவில் இரண்டு தலைவர்களும் தங்களது மூன்றாவது பதவிக்காலம் மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
மோடியை பொறுத்தவரை, கூட்டு கட்சிகளின் அரசாங்கத்தை கொண்டுள்ள அவரது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, தேசிய பாதுகாப்பில் அவரின் பிம்பத்தை உயர்த்தும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதம் நடந்த தேர்தலில், அவரது பாரதிய ஜனதா கட்சி எதிர்பாராத விதமாக பெரும்பான்மையை இழந்ததால், மோடி பின்னடைவை சந்தித்தார்.
இந்த பலவீனமான நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க பிராந்திய கூட்டாளிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் மோடி உள்ளார்.
கனடாவில் சீக்கியர்கள் தங்கள் சொந்த மாநிலமான பஞ்சாப்க்கு வெளியே, கனடாவின் மக்கள் தொகையில் சுமார் 2வீதமாக உள்ளனர்.
எனவே கனேடிய பிரதமர் இந்த வாக்குகளை குறிவைப்பதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 2025 க்குள் நடத்தப்பட வேண்டிய தேசியத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் லிபரல் கட்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது எனவே ட்ரூடோவைப் பொறுத்தவரை, மகிழ்ச்சியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவரை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை உதவக்கூடும்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கேட்டபோது, உட்கட்சி சூழ்ச்சியைப் பற்றி மற்றுமொரு நேரத்தில் பேசலாம் என்று அவர் மழுப்பல் பதிலை வழங்கியதையும், அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்போது, இந்த அரசாங்கமும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கனடாவின் இறையாண்மைக்காக நிற்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பீட்டர்பரோவில் உள்ள ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரான கிறிஸ்டின் டி கிளெர்சி, இந்த சம்பவத்தை காட்டிலும் ட்ரூடோ தீர்க்கவேண்டிய உள்நாட்டு பிரச்சினைகள் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.