உலகம்
இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு: மறுக்கும் நெதன்யாகு
இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு: மறுக்கும் நெதன்யாகு
இஸ்ரேல் (Israel), பாலஸ்தீன (Palestine) பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது என்பதால் அதனை விரைவில் திரும்பப் பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை, சர்வதேச நீதிமன்றம் நேற்று (19.07.2024) பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) நீதிபதிகளின் ஆலோசனைக் கருத்தின் காரணமாக, சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலுக்கான ஆதரவு பலவீனப்படுத்தப்படலாம்.
அதேவேளை, சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் நவாஃப் சலாம், பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து 15 நீதிபதிகள் கொண்ட குழு வழங்கிய கட்டுப்பாடற்ற ஆலோசனைக் கருத்தை நேற்று வாசித்துள்ளார்.
இதற்கமைய, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலிய குடியேற்றங்களை கட்டியெழுப்புதல் மற்றும் விரிவுபடுத்துதல், அப்பகுதியின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல், நிலங்களை இணைத்தல், நிரந்தரக் கட்டுப்பாட்டை விதித்தல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகள் உட்பட பல கொள்கைகள் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக நீதிபதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், சர்வதேச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை மறுக்கும் விதத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, “யூத மக்கள் தங்கள் சொந்த நிலத்தினை ஆக்கிரமிப்பவர்கள் அல்ல, எமது நித்திய தலைநகரான ஜெருசலேமிலிலோ, யூதேயாவிலோ மற்றும் சமாரியாவில் உள்ள எங்கள் முன்னோர்களின் நிலத்திலும் நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
மேலும், பல இஸ்ரேலிய அரசுப் பேரவையின் அமைச்சர்கள் மற்றும் குடியேறிய தலைவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக கண்டித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி, சிலர் இதற்கு பதிலடியாக மேற்கு கரையை உடனடியாக முறையாக இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மே மாதம், தெற்கு காசாவின் ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், நீதிமன்றத்தை மீறி காசா, ரஃபா உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.