உலகம்
இஸ்ரேல் இராணுவ வீரர்களை சிறைப்பிடித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவ வீரர்களை சிறைப்பிடித்த ஹமாஸ்
இஸ்ரேல்(Israel) காசா போரானது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இஸ்ரேல் காசா தாக்குதலானது கடந்த ஒக்டோபர் 7 திகதி ஆரம்பமாகி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கின்றது.
காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளதோடு பலர் பாதிப்படைந்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன், இதுகுறித்து அல் கஸ்சாம் படைப்பிரிவின் ஹமாஸ் அமைப்பு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு காசாவில் ஜபாலியாவில் நடந்த சண்டையின் போது சுரங்கப்பாதைக்குள் பதுங்கியிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை இழுத்து வந்தனர். இதில் சில இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்ததோடு பலரை சிறைப்பிடித்தும் உள்ளனர்.
ஒரு சுரங்கப்பாதையில் இரத்தம் தோய்ந்த ஒரு நபர் தரையில் இழுத்துச் செல்லப்படும் காணொளிி, கைப்பற்றபட்ட துப்பாக்கி புகைப்படங்களை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டனர்.
ஆனால் இதை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளதோடு ஒரு இராணுவ வீரர் கூட கடத்தப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன் கூறும்போது, இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள் தேவையில்லை. இது போன்ற பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல் ராணுவத்திற்கு காசாவில் “ஆக்கிரமிப்பைத் தொடர அதிக அவகாசம் தருவதாக இருக்கிறது என தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்டுக்கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் தலைநகர் டெல் அவிலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டதில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin netanyahu) பதவி விலக வேண்டும். புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையிருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் வெடித்தமையும் குறிப்பிடத்தக்கது.