உலகம்
இஸ்ரேல் மீது போர் குற்றங்களுக்காக கண்டனம் வெளியிட்டுள்ள மலாலா யூசுப்சாய்
இஸ்ரேல் மீது போர் குற்றங்களுக்காக கண்டனம் வெளியிட்டுள்ள மலாலா யூசுப்சாய்
காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் போர் குற்றங்களுக்காக இஸ்ரேலை தொடர்ந்து கண்டிப்பதாகவும் பாகிஸ்தானிய சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai) தெரிவித்துள்ளார்.
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் மலாலா, பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, ”காசா மக்களுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.
போர் நிறுத்தம் அவசியம், அவசரம் என்று புரிந்துகொள்வதற்கு இன்னும் அதிகமான இறப்புகள், குண்டு வீசப்பட்ட பாடசாலைகள் மற்றும் பசியால் வாடும் குழந்தைகள் அவசியம் இல்லை. சர்வதேச சட்டங்களை மீறியதற்காகவும், போர் குற்றங்களுக்காகவும் இஸ்ரேலை நான் கண்டிக்கிறேன், தொடர்ந்து கண்டிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு பெண் கல்வியை ஆதரித்து பேசியதற்காக தாலிபான்களால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுப்சாய் அதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து அவர் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்று, இளம் வயதிலேயே இந்த விருதை பெற்றவர் என பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.