உலகம்
நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த ஒரு குழு: மறக்க முடியாத சம்பவம்
நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த ஒரு குழு: மறக்க முடியாத சம்பவம்
மெக்சிகோ வளைகுடாவில் ஒரு சிறிய படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 பேர் கொண்ட குழுவை உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலின் ஊழியர்கள் மீட்டுள்ளனர்.
தொடர்புடைய 14 பேர்களும் அந்த சிறிய படகில் ஒருவார காலத்திற்கும் மேலாக நடுக்கடலில் தத்தளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ராயல் கரீபியன் குழுமத்தால் இயக்கப்படும் Icon of the Seas என்ற உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலானது மெக்சிகோ வளைகுடாவில் பயணப்பட்ட நிலையில், சிறிய படகு ஒன்றில் சிலர் தத்தளிப்பதை கவனித்துள்ளனர்.
உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட கப்பல் ஊழியர்கள், அந்த 14 பேர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் அளித்துள்ளனர்.
தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பயணிகள் கப்பலானது மியாமியில் இருந்து ஹோண்டுராஸ் நோக்கிச் சென்ற போதே தொடர்புடைய சிறிய படகை எதிர்கொண்டுள்ளனர்.
இதனிடையே, மீட்பு நடவடிக்கையானது அமெரிக்க எல்லைக்கு வெளியே நடந்துள்ளதாகவும் மெக்சிகோ அதிகாரிகள் இந்த விவகாரத்தை விசாரிப்பதே முறை என்றும் அமெரிக்க கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அனைவரும் அடுத்த நாள் ஹோண்டுராஸ் நகரம் ஒன்றில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நாட்டவர்கள், அவர்களுக்கு என்ன ஆனது என்பது உள்ளிட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.