உலகம்
இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு
இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இன்று இந்தியாவின் ஜெய்ப்பூர் நகருக்கு வந்தடைந்தார்.
இந்தியாவில் நாளை (26 ஜனவரி) 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது வழக்கம்.
அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அங்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பூங்கொத்து அளித்து மேக்ரானை வரவேற்றார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள மேக்ரான், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
அதற்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சாலை பேரணியில் பங்கேற்கும் அவர், பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மஹால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.