இலங்கை
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் : அரசியல்வாதி கோரிக்கை
ஈழ இன அழிப்புக்கான நீதியை வென்றெடுப்பதில் உலகத் தமிழர்களின் தன்மானமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்ற வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என கனடாவின் ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயல் உறவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
2500 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் கண்டு, எழுத்தறிவு பெற்ற மக்கள் கூட்டத்தின் வழிவந்தவர்கள் தமிழர்கள் என்று தமிழரின் தொன்மையைக் கீழடியும், கந்தரோடையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழர்கள் கேட்பார் யாருமின்றி படுகொலை செய்யப்பட்டதன் குறியீடாக ’முள்ளிவாய்க்கால்’ என்ற இடம் அமைந்துள்ளது.
எனினும், உலகம் எங்கும் 700 கோடி தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டில் தான் 2009இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று 18 பேர் தீக்குளித்து தம்மை ஆகுதி ஆக்கினார்கள்.
நான் கனடா நாட்டு ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினராக உங்கள் முன் இங்கே நின்று கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்த கந்தரோடையும், முள்ளிவாய்க்காலும் அமைந்திருக்கும் ஈழ தேசம் தான் எனது பூர்வீகம் என்று கம்பீரமாக சொல்வதில பெருமை கொள்கின்றேன்.
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக சபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துவரும் இலட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்.
இன்றும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர் தேசத்திற்காகவும் தம் குரலை அணையவிடாமல் வைத்திருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் 80களில் மாணவத்தலைவர்களில் ஒருவராக நானும் இருந்து சிறீலங்கா அரசின் இன அழிப்பினால் நாட்டை விட்டு உலகம் முழுவதும் சிதறி ஓடிய இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களில் நானும் ஒருவன்.
இந்நிலையிலேயே, புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் தஞ்சமடைந்தேன். இன்று உங்கள் முன்னால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நிற்கும் நிலைக்கு கனடா எனக்காக அனைத்து உரிமைகளையும் அங்கீகரித்துள்ளது.
உலக வரலாற்றில் முதல் தடவையாக என்னைப் போன்ற கனடா வாழ் மக்கள் அனைவரதும் முயற்சியோடு தமிழ் மரபுத் திங்கள் கனடா தேசத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை உலகத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று மிக்க அங்கீகாரமும் சாதனையுமாகும்.
அத்துடன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா ஏற்றுக்கொண்டமைக்கு முன்னோடியாக தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு தமிழக மக்கள் கொடுத்த பேராதரவுக்கும் நமது தோழமை கலந்த நன்றி உணர்வை இந்தச் சிறப்பு நாளில் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், வணிகம், கலை, இலக்கிய, இசை என தமிழர்கள் கோலோச்சாத துறைகளே இல்லை. உலகின் நான்கு திசைகளிலும் தமிழர்கள் மலையென சாதனைகளைக் குவித்து வருகின்றனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இந்தியாவிற்குள்ளும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக சமூக நீதியைக் கடைப்பிடித்து ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.இந்த சாதனைகளையும், வெற்றிகளையும் தாண்டி 21 ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட்டமாகவும் நம் இனம் இருந்து வருகிறது.
உலக அரங்கிலே இன அழிப்புக்கு உள்ளானது மட்டுமின்றி அதற்கான நீதியை இன்னும் வென்றெடுக்காதவர்களாகவும் நாம் இருந்து வருகிறோம். தமிழனுக்கு எங்கு அநீதி இழைத்தாலும் திரும்பிப் பார்க்கும் இடம் தமிழ்நாடு தான்.
இந்த மண் தமிழினத்திற்காக பன்னாட்டரங்கில் குரல் கொடுப்பதில் தான் உலகெங்கும் பரவிவாழும் தமிழர்களின் மாண்பும் பாதுகாப்பும் இருக்கிறது.
மேலும், இனவழிப்புக்கு உள்ளான தமிழினம் நீதியை வென்றெடுப்பதில்தான் உலகத் தமிழர்களின் தன்மானமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். அந்த வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி குறிப்பிட்டுள்ளார்.