தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்
தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது ஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தனது உரையில் தெரிவித்துள்ளதாவது,
மனித உரிமை மீறல்களை சாத்தியமாக்கும் சட்டங்கள் குறித்தும் கரிசனைகள் காணப்படுகின்றன.
பயங்கரவாத தடைச்சட்டம் 1979 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது முதல் அரசியல் கைதிகளை நீண்ட காலம் தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மிகமோசமான கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் நிகழ்ந்த வெலிக்கடை படுகொலைகள் என அழைக்கப்படும் சிறைச்சாலை படுகொலையில் கொல்லப்பட்ட 53 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களே.
பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை கைதுசெய்யப்பயன்படுகின்றது அந்த சட்டம் தற்போது நீக்கப்படலாம் என்கின்ற போதிலும் புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மோசமானதாகயிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது எனவும் மேலும் உரையாற்றியுள்ளார்.