உலகம்
அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொலை செய்ய திட்டம்
அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொலை செய்ய திட்டம்
அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்திய பிரஜை ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் கனடாவில் கடந்த ஜூன் மாதம், சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் நிராகரித்திருந்ததோடு, இந்த விவகாரம் இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், தற்போது கனடாவை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவின், நியூயோர்க்கில் வசித்து வரும் சீக்கிய தலைவர் குர்பட்வாண்ட் சிங் பன்னன் என்ற இந்திய வம்சாவளி நபரை கொலை செய்ய முயற்சித்ததாக எழப்பட்ட முறைப்பாட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 52 வயதான நிகில் குப்தா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது நியூயோர்க் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த குா்பந்வந்த் சிங் பன்னுக்கு எதிராக பல பயங்கரவாதக் குற்றச் செயல் வழக்குகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட, ‘நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை’ சேர்ந்த குர்பட்வாண்ட் சிங் பன்னனை கொலை செய்ய, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், குப்தாவை நியமித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி குப்தா தனக்கு அறிமுகமான ஒரு நபரிடம் சீக்கிய தலைவரை கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், அந்த நபர் அமெரிக்க அரசின் போதைப்பொருள் நடைமுறையாக்க நிர்வாகத்தின் இரகசிய உளவு அதிகாரியாக இருப்பவர் என்பதை குப்தா அறிந்திருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் குா்பந்வந்த் சிங்கை கொலை செய்ய நடைபெற்ற முயற்சியை அந்நாட்டு அதிகாரிகள் முறியடித்ததாகவும், இது தொடா்பாக இந்திய அரசுக்கு அவா்கள் எச்சரிக்கை விடுத்ததாகவும் பிரித்தனிய நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், செக் குடியரசில் தலைமறைவாகி இருந்த குப்தாவை கடந்த ஜூன் மாதம், அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர் விரைவில் அமெரிக்காவின் நியூயோர்க் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பிலான குற்றம் நிரூபிக்கப்பட்டால், கைது செய்யப்பட்டுள்ள குப்தாவுக்கு அதிகபட்சமாக 10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என அமெரிக்க பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மண்ணில், அமெரிக்க குடிமகன்கள் மீதான கொலை முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அமெரிக்க பொலிஸார், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிக்க யார் நினைத்தாலும், அவர்கள் மீது விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து இந்திய அரசிடம் அமெரிக்கா தொடர்ந்து கவலையை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சீக்கிய தலைவர் மீதான கொலை முயற்சி குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய அரசால் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய தரப்பு கூறியுள்ளது.