ஹமாஸ் பிடியில் ஒரு நொடி கூட தூங்கவில்லை… தாயகம் திரும்பிய 17 பேர் கண்ணீர் தகவல்
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக விடுதலையானவர்களில் 17 தாய்லாந்து நாட்டவர்களும் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர்.
கத்தார் மற்றும் எகிப்து தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக 182 பாலஸ்தீன மக்களும் 81 பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இதில் விடுதலையான 17 தாய்லாந்து நாட்டவர்கள் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர். அக்டோபர் 7ம் திகதி போர் தொடங்கும் முன்னர் வரையில் இஸ்ரேலில் 30,000 தாய்லாந்து நாட்டவர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
மட்டுமின்றி, குறித்த போரில் 39 தாய்லாந்து நாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போரில் சிக்கி கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களும் தாய்லாந்து நாட்டவர்களே என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 17 பேர்களும் பாங்காக்கில் வந்திறங்கியதும், போரில் கொல்லப்பட்ட 39 பேர்களுக்காக அதிகாரிகளுடன் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்புடைய 17 பேர்களையும் வரவேற்க குடும்ப உறுப்பினர்கல் பலர் பாங்காக் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ஹமாஸ் படைகளால் மொத்தம் 23 தாய்லாந்து பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஒன்பது பேர் இன்னும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஹமாஸ் பிடியில் சிக்கிய ஒரே ஒரு பெண், பாங்காக் விமான நிலையத்தில் கண் கலங்கியதுடன், அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹமாஸ் பிடியில் சிக்கியிருந்த 50 நாட்களும் நரகமாக இருந்தது என்றும், ஒரு நொடி கூட தூங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். போதிய உணவின்றி, பலரும் உடல் எடை குறைந்து காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.