உலகம்
போர் கப்பலை சுற்றிவளைத்த ஹவுதி படையினரின் தாக்குதல் ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்க கடற்படையினர்
போர் கப்பலை சுற்றிவளைத்த ஹவுதி படையினரின் தாக்குதல் ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்க கடற்படையினர்
செங்கடல் பகுதியில் ரோந்து கப்பலை தாக்க வந்த ஆளில்லா ட்ரோன் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் வைத்து சிறைப்பிடித்தனர்.
இதில் 25 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இஸ்ரேலிய கொடி மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் செங்கடல் பகுதிக்குள் நுழைந்தால் சிறைபிடிப்போம் என எச்சரித்தனர்.
இந்நிலையில் செங்கடல் பகுதிக்கு ரோந்துக்கு சென்ற அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஆளில்லாத ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா தாக்குதல் ட்ரோன்களை அடையாளம் கண்டு கொண்ட அமெரிக்க கடற்படையினர் துரிதமாக செயல்பட்டு டஜன் கணக்கான ட்ரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இது தொடர்பாக பெண்டகன் வெளியிட்டுள்ள தகவலில், இவை அனைத்து ஒரு வழி தாக்குதல் ட்ரோன்கள் எனவும், இந்த தாக்குதலில் அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.