உலகம்
படுகொலையில் இருந்து தப்பிய சீக்கிய தலைவர்… கனடா போன்று இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
படுகொலையில் இருந்து தப்பிய சீக்கிய தலைவர்… கனடா போன்று இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
அமெரிக்காவில் சீக்கிய தலைவர் ஒருவரின் படுகொலை உள்ளூர் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் இந்தியாவின் பங்கிருப்பதை அறிந்த அதிகாரிகள் தூதரக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் இருந்தும், டெல்லியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்தும் உடனடி பதில் வெளியாகவில்லை என்றே கூறப்படுக்கிறது.
மேலும், சீக்கிய தலைவரை படுகொலை செய்யும் திட்டம் இந்தியாவில் எழுந்த ஆர்ப்பாட்டங்களால் கைவிடப்பட்டதா அல்லது அமெரிக்க அதிகாரிகளால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டதா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் பங்கிருப்பதாக கனடா உறுதிபட தெரிவித்த இரண்டு மாதங்களுக்கு பின்னர், அமெரிக்கா தொடர்பான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆனால் கனடாவின் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே இந்தியா புறந்தள்ளியுள்ளது. சீக்கியர் விவகாரத்தில் இந்தியாவுக்கு தூதர எச்சரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்க பெடரல் சட்டத்தரணிகள் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் குறைந்தது ஒரு சந்தேக நபருக்கு எதிராக சீல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் தாக்கல் செய்துள்ளனர்.
இதில், Gurpatwant Singh Pannun என்பவரே படுகொலையில் இருந்து தப்பியதாக வெளிச்சத்தில் வந்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் தற்போது Gurpatwant Singh Pannun கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், அமெரிக்க மண்ணில் இந்திய அதிகாரிகளால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதற்கு அமெரிக்காவே பதிலளிக்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜர் போன்று, குர்பத்வந்த் சிங் பண்ணுன் என்பவரும் பல காலமாக காலிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து போராடி வருபவர். நிஜ்ஜர் வழக்கில் இந்தியாவின் பங்கு தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் இணைந்து தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, நிஜ்ஜர் படுகொலையில் இந்தியாவின் பங்கு தொடர்பில் கனடா வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்த பின்னர், தங்களது நெருக்கமான நாடுகளுக்கு குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீதான தாக்குதலை முறியடித்த தரவுகளை அமெரிக்கா பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.