உலகம்
பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரித்தானிய பிரதமர் ரிஷி மீது கடும் தாக்குதல்
பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரித்தானிய பிரதமர் ரிஷி மீது கடும் தாக்குதல்
உள்துறைச் செயலர் பதவியிலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மேன், பிரதமர் ரிஷி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக கடுமையான வார்த்தைகளால் அவரை சாடியுள்ளார்.
உள்துறைச் செயலராக பதவி வகித்த சுவெல்லா, பொலிசார் குறித்தும், வீடற்றவர்கள் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து, பதவி விலகுமாறு பிரதமர் ரிஷி சுவெல்லாவை கேட்டுக்கொண்டார்.
அதன்படி பதவி விலகிய சுவெல்லா, பிரதமர் ரிஷியை கடுமையாக விமர்சித்து மூன்று பக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ரிஷி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக சாடியுள்ளார் சுவெல்லா.
2022ஆம் ஆண்டு, பிரதமர் போட்டியில் ரிஷி இருந்தபோது, கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் ரிஷி நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த நிலையிலும், சில நிபந்தனைகளின் பேரில், தான் ரிஷிக்கு ஆதரவளித்ததாகவும், பதிலுக்கு ரிஷி தனக்கு சில வாக்குறுதிகள் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் சுவெல்லா.
அதாவது, தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், சட்ட விரோத புலம்பெயர்தலை மொத்தமாக கட்டுப்படுத்துதல், சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவுக்கு வரும் வகையை மறுசீரமைத்தல், பிரித்தானியாவில் பணி விசா பெறுவதற்கு, பணியாளர்களுக்கு தற்போதிருக்கும் ஊதிய அளவை அதிகரித்தல் முதலான பல விடயங்களை பிரித்தானிய மக்களுக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வாக்களித்ததாகவும்,
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனக்கு ரிஷி உதவுவதாக உற்தியளித்ததாலேயே அவர் பிரதமராக தான் ஆதரவளித்ததாகவும் தெரிவித்துள்ள சுவெல்லா, ஆட்சிக்கு வந்த பிறகு ரிஷி தனது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகவும், இது தனக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே செய்த துரோகம் என்றும் சாடியுள்ளார் சுவெல்லா.
அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டதாலேயே இன்று பதவியிழந்து நிற்கும் சுவெல்லா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலும், தனக்கு சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கலாம் என்றும், என்றாலும், 2019ஆம் ஆண்டு நம்மை ஆதரித்த பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாகவே தான் எப்போதுமே குரல் கொடுக்க முயன்றுவந்துள்ளதாகவும், இவ்வளவு கௌரவமுள்ள பதவிகளில் தங்களை அமரவைத்த மக்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கவே தன்னாலியன்ற வரையில் முயன்றுவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுவதைப் பார்க்கும்போது, புலம்பெயர்தல், சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டவர்களுக்கு விசா என பல விடயங்களை கட்டுப்படுத்துவதன் பின்னணியில் ரிஷிக்கும் பங்கிருப்பதாகவும், தற்போது பிரதமர் பதவியில் அமர்ந்துவிட்டதால், அடுத்த தேர்தலும் நெருங்கும் நிலையில், தலைமைப் பொறுப்பை தக்கவைப்பதற்காக ரிஷி தனது போக்கை மாற்றிக்கொண்டது போலவும் தோன்றுகிறது.