உலகம்
ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை… சோதிக்க வேண்டாம் என நெதன்யாகு
ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை… சோதிக்க வேண்டாம் என நெதன்யாகு
ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கையை அடுத்து, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போரில் களமிறங்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இன்னொரு கட்டத்திற்கு நகரும்
இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தொடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், முதன்முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், தங்கள் முன் அனைத்து வாய்ப்புகளும் திறந்தே உள்ளன என இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹமாஸ் படைகளின் தாக்குதலை மொத்தமாக பாராட்டிய அவர், அது புனிதப்போர் என்றார். மட்டுமின்றி, இந்தப் போரானது இன்னொரு கட்டத்திற்கு மிக விரைவில் நகரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதல் இஸ்ரேலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், அவர்களின் பலவீனம் அம்பலமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார். ஆனால் ஹசன் நஸ்ரல்லாஹ் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி அளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
வடக்கிலுள்ள எங்கள் எதிரிகளுக்குச் சொல்கிறேன், எங்களைச் சோதிக்க வேண்டாம், நீங்கள் பெரும் விலை அளிக்க நேரிடும் என்றார். இதனிடையே, ஈராக் மற்றும் யேமன் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், உலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதிக ஆயுத பலம் கொண்ட
மேலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முட்டாள்தனமான தவறு என்றும் எச்சரித்தார். அத்துடன் நாங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளோம் என்பதையும் வெளிப்படுத்த விரும்புகிறோம் என்றார் ஹசன் நஸ்ரல்லாஹ்.
2006ல் இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லா முன்னெடுத்த சண்டையில் 1,200 பேர்கள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா உலகிலேயே அதிக ஆயுத பலம் கொண்ட, அரசு சாரா குழுக்களில் ஒன்று.
இவர்கலிடம் 60,000 உயர் பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர். இவர்களிடம் குவிந்திருக்கும் ஏவுகணையால் இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.