அதி தீவிர புயலாக வலுப்பெற்ற சியாரன் : பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
சியாரன் புயலால் பிரித்தானிய தீவுகள் மற்றும் சனல் தீவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையான கடற்பரப்பு ஊடாக நேற்றிரவு சியாரன் புயல் நகர்ந்து செல்லவுள்ளதால் இரண்டு நாடுகளுக்கும் புயல் பாதிப்பு மற்றும் கடும் மழைக்குரிய எச்சரிக்கைகள் விடுக்கபட்டிருந்தன.
இந்த நிலையில், பிரித்தானிய தீவுகள் மற்றும் சனல் தீவுகள் குறித்த புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அனர்த்தத்தால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அங்குள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜெர்சி தீவிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயல் காரணமாக தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கரையோர சாலைகளை போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டாமெனவும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் கிழக்கு ஆங்கிலியா ஊடாக சியாரன் புயல் இன்று பிற்பகளவில் வட கடலுக்குள் செல்லும் என மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புயல்தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடும்காற்று மற்றும் மழைபொழிவு இருக்கும் என்பதால் – உயிர் மற்றும் உடைமைகளுக்கு அபாயம் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரித்தானியாவின் சனல் தீவுகளுக்கு 36 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த புயல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.