உலகம்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் உரைக்கு இஸ்ரேல் போர்க்கொடி
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் உரைக்கு இஸ்ரேல் போர்க்கொடி
ஹமாஸ் அமைப்பு அக்டோபர் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கான வரலாற்று சூழ்நிலைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆற்றிய உரைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றில் உரையாற்றிய அன்டனியோ குட்டரஸ், ”ஹமாசின் தாக்குதல் வெற்றிடமொன்றில் இடம்பெறவில்லை” என தெரிவித்துள்ளார்.
“பாலஸ்தீன மக்கள் 56 வருட மூச்சுதிணறவைக்கும் ஆக்கிரமிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளனர் தங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பாளரினால் பறிபோவதையும் வன்முறையில் சிக்குண்டுள்ளதையும் பார்த்துள்ளனர்.
அவர்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது அவர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அவர்களின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.
அரசியல்தீர்வு குறித்த அவர்களின் நம்பிக்கைகளும் காணாமல்போகின்றன.
எனினும் பாலஸ்தீனியர்களின் துயரங்களால் ஹமாசின் கண்டிக்கப்படவேண்டிய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. அதேபோன்று ஹமாசின் தாக்குதல்களிற்காக பாலஸ்தீன மக்களிற்கு எதிரான கூட்டுத்தண்டனையை நியாயப்படுத்த முடியாது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் கருத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் அவர் பதவிவிலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறுவர்கள் பெண்கள் முதியவர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர்நாயகம் ஐநாவிற்கு தலைமைதாங்குவதற்கு பொருத்தமற்றவர் என ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் கிலாட் எர்டான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நான் அவரை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.