உலகம்
லண்டனில் அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியரின் வாகனம்
லண்டனில் அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியரின் வாகனம்
மேற்கு லண்டனில் சீக்கிய உணவக உரிமையாளர் ஒருவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்து பெண்களுக்கு பலாத்கார அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விவகாரத்தின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதாகவே அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சீக்கியரான ஹர்மன் சிங் கபூர் என்பவரின் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டதுடன், அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
உணவக உரிமையாளரான ஹர்மன் சிங் கபூர் குடும்பத்தினர் தெரிவிக்கையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாகவும், பலாத்கார மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காலிஸ்தான் பிரிவினையை ஆதரிக்காத பிரித்தானிய சீக்கியர்களுக்கு சமீப காலமாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்திய உயர் ஸ்தானிகரின் லண்டன் அலுவலகம் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட அடுத்த நாள் ஹர்மன் சிங் கபூரின் உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்கொட்லாந்திலுள்ள குருத்வாரா ஒன்றின் முன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூவர் கொண்ட குழுவே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் ஸ்கொட்லாந்தில் குடியிருப்பவர்கள் அல்ல எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் காலின் ப்ளூம், இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், இந்த காலிஸ்தான் இயக்கம் என அழைக்கப்படும் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தற்போது குருத்வாராக்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும் காலின் ப்ளூம் தெரிவித்துள்ளார்.