உலகம்

பிரான்ஸ் ராணுவ தளம் முன் துடைப்பங்களுடன் திரண்ட பெண்கள்

Published

on

பிரான்ஸ் ராணுவ தளம் முன் துடைப்பங்களுடன் திரண்ட பெண்கள்

நைஜர் நாட்டிலுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன் துடைப்பங்கள், சமையல் பாத்திரங்களுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டுள்ளனர்.

கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 26ஆம் திகதி, நைஜர் நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது, ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoum கைது செய்யப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

உணவோ, மின்சாரமோ, மருந்துகளோ இல்லாமல் பல நாட்களாக அவர்கள் மோசமான நிலையில் சிறையில் வாடிவருவதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு திரண்ட ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள்

ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, நைஜர் நாட்டுக்கு அளித்துவந்த நிதியுதவிகளை பிரான்ஸ் நிறுத்திவிட்டது. அத்துடன், Economic Community of West African States (ECOWAS) என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான அமைப்பு, நைஜர் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக படைகளை களமிறக்க ஒப்புதலளித்துள்ளது.

ECOWAS சுதந்திரமாக செயல்படவில்லை, அதை பிரான்ஸ் பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறி, பிரான்சுக்கும் ECOWAS அமைப்புக்கும் எதிராக நைஜர் நாட்டு ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள்.

இந்நிலையில், நைஜர் தலைநகர் Niameyக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு, நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டுள்ளனர்.

துடைப்பங்கள், சமையல் பாத்திரங்களுடன் அங்கு கூடியுள்ள பெண்கள், தங்கள் நாட்டிலிருந்து பிரான்ஸ் ராணுவம் வெளியேறவேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள்.

மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு பிரான்சுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என அவர்கள் ராணுவவீரர்களை நோக்கி சத்தமிட்டார்கள். எங்கள் நாட்டு ஆண்கள் மட்டுமல்ல, நாங்கள் அனைவருமே பிரான்ஸ் எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதையே விரும்புகிறோம் என்பதைக் காட்டுவதற்காகவே இன்று பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளோம் என்கிறார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள பெண் ஒருவர்.

Exit mobile version