தங்களது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த 2-ஆவது முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.
இது குறித்து வட கொரிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மல்லிக்யாங்-1 உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
சொல்லிமா-1 என்ற புதிய வகை ராக்கெட் மூலம் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அந்த ராக்கெட்டின் முதல் மற்றும் 2-ஆவது நிலை சரியாக இருந்தன.
இருந்தாலும் 3-ஆவது நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்துச் சிதறியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தங்களது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவிருப்பதாக ஜப்பான் கடலோரக் காவல் படையிடம் வட கொரியா முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தது.
கொரிய போர் முடிவுக்குப் பிறகு அந்த தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய பயிற்சிகளை தங்கள் மீது படையெடுப்பதற்கான போர் ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வட கொரியா கடந்த மே மாதம் முயன்றது.
எனினும், செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. இந்த நிலையில், உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வட கொரியாவின் 2-ஆவது முயற்சியும் தற்போது தோல்வியடைந்தது.
எனினும், இந்த முயற்சியைக் கைவிடப் போவதில்லை எனவும், 3-ஆவது முறையாக எதிர்வரும் அக்டோபா் மாதம் உளவு செயற்கைக்கோள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் வட கொரியா உறுதியாகத் தெரிவித்துள்ளது.
Comments are closed.