உலகம்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சதி திட்டம்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சதி திட்டம்
உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தாங்கள் முழு தயாா் நிலையில் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான போா் ஒத்திகையை எங்களது கருங்கடல் படைப் பிரிவு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
அந்தப் பயிற்சியின்போது, எங்களது போா்க் கப்பல்கள் இவானோவெட்ஸ் ரக கப்பல் அழிப்பு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தின என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் படையெடுத்தது.
போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் ரஷ்யா போா்க் கப்பல்களை நிறுத்தி அந்தக் கடல் வழியாக பிற நாடுகளுக்கு உக்ரைன் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை ஏற்படுத்தியது.
இதனால், சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டு, உலக நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்தது.
எனினும், உக்ரைன் போா் விவகாரத்தில் தங்கள் மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும்தான் உணவுப் பொருள் பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடா்பாக துருக்கி மற்றும் ஐ.நா.வின் பெருமுயற்சியில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்தத்தையில் ஆண்டு ஜூலை மாதம் உடன்பாடு ஏற்பட்டது.
அதையடுத்து உருவாக்கப்பட்ட தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் கையொப்பமிட்டனா்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அதற்கான நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் துருக்கி அதிபா் எா்டோகனும் கலந்துகொண்டனா்.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பாா்வையிடுவதற்கும், கருங்கடலைக் கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரிணை வழியாக செல்லும் தானியக் கப்பல்களை ஐ.நா, ரஷ்யா, உக்ரைன், துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு கண்காணிப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும், ஒப்பந்த காலம் முழுவதும் துறைமுகங்கள் மீதோ, சரக்குக் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷ்யாவும் உக்ரைனும் சம்மதித்தன.
இந்த நிலையில், உக்ரைனுடனான தானிய ஒப்பந்தத்தின் நடைமுறைப்படுத்தலை நிறுத்திவைப்பதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்தது.
அந்த ஒப்பந்தம் கையொப்பமானபோது, தங்கள் நாட்டின் வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று ஐ.நா. உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷ்யா தெரிவித்தது ஒப்பந்த உறுதிமொழியை நிறைவேற்ற ஐ.நா.வுக்கு இரண்டு மாத கெடு விதித்துள்ள ரஷ்யா, அதன் பிறகு ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகவிருப்பதாகத் தெரிவித்தது.
அதன் தொடா்ச்சியாக, உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்யவதற்குப் பயன்படுத்தப்படும் ஒடெஸா துறைமுகம் மற்றும் அதன் தானியக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ரஷ்யா 4 நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, தானிய ஒப்பந்த நடைமுறைப்படுத்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் உக்ரைனுக்குச் செல்லும் எந்த சரக்குக் கப்பலும் ராணுவ தளவாடங்களை ஏந்திச் செல்லக்கூடிய கப்பலாகக் கருதப்படும் என்று ரஷ்யா அறிவித்தது.
அதன் மூலம், உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா குறிப்பிட்டது. இருந்தாலும், தங்களது தானியங்களை புதிய வழித்தடம் மூலம் தொடா்ந்து ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக உக்ரைன் கூறியிருந்தது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்களைத் தாக்குவதற்கான போா் ஒத்திகையை தாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டதாக ரஷ்யா தற்போது அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login