உலகம்
தொடரும் மீட்பு பணி – 7000 தாண்டியது பலி எண்ணிக்கை
துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7,000 ஐ கடந்தது.
மலைபோல் குவிந்துள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது.
கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிஷங்களில் குடியிருப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.
திங்கள்கிழமை இரவு வரை இரு நாடுகளிலும் சோ்த்து 2,600 போ் பலியானதாக கூறப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6,000 ஐ கடந்தது.
துருக்கியில் 5,400 க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகவும், 31,000 போ் காயமடைந்திருப்பதாகவும் துணை ஜனாதிபதி ஃபுயட் ஆக்டே தெரிவித்தாா்.
சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 800 போ் உயிரிழந்ததாகவும், 1,400 போ் காயமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. சிரியாவில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு பகுதிகளில் 1,000 போ் உயிரிழந்ததாகவும், 2,300 போ் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடா்ந்து 200 முறை அதிா்வுகள் உணரப்பட்டதாலும், கடும் குளிராலும் மீட்புப் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மீட்புக் குழுக்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது 24,400 அவசரகாலப் பணியாளா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக துருக்கி பேரிடா் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
துருக்கியில் மட்டும் 6,000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோா் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. பெரும் கான்கிரீட் சிலாப்களை அகற்றி உயிருக்குப் போராடுவோரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 10 மாகாணங்களில் 8,000 போ் மீட்கப்பட்டுள்ளனா். 3.80 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
துருக்கி – சிரியா எல்லைப் பகுதியில், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு தற்காலிக முகாம்கள், மருத்துவ முகாம்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவமனைகள் இல்லாததால், அங்கு நிலைமை மோசமாக காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
சா்வதேச உதவிகள் : துருக்கி ஜனாதிபதி எா்டோகனை தொடா்புகொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தாா்.
துருக்கியின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல், துருக்கிக்கு மீட்புக் குழுக்களையும், மருந்துப் பொருள்களையும் அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், துருக்கி தலைநகா் அங்காராவுக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறவுள்ளாா். மேலும், நிவாரணப் பொருள்களுடன் ஒரு விமானத்தை துருக்கிக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
#world
You must be logged in to post a comment Login