24 மணி நேரத்தில் உயிரிழந்த 13 பயணக் கைதிகள்! ஹமாஸ் அறிவிப்பு
காசா மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 7வது நாளாக தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.
காசாவின் எல்லைப் பகுதியில் இசை திருவிழா நடைபெற்று கொண்டு இருக்கும் போது ஹமாஸ் அமைப்பினர் தங்கள் தாக்குதலை திடீரென தொடங்கினர்.
இந்த இசை திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு இருந்த நிலையில், பலரை ஹமாஸ் அமைப்பினர் தங்களது பிணைக் கைதிகளாக பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு பிடித்து சென்றனர்.
இதையடுத்து இஸ்ரேலில் போர் பிரகடனம் அறிவிக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி வரப்பட்ட 13 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹமாஸின் போராளி பிரிவு “அல்-கஸ்ஸாம்” தெரிவித்த தகவலில், காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் உட்பட 13 பணயக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காசா மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ஹமாஸ் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் உளவியல் போர் புரிவதாகவும், தவறான பிரச்சாரத்தை பரப்புவதாகவும் ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏனென்றால், இதற்கு முன்னதாக வரும் நாட்களில் தனது தரைவழி தாக்குதலை முன்னெடுக்கும் முயற்சியில் 1 மில்லியன் பாலஸ்தீன மக்களை 24 மணி நேரத்திற்குள் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.