பல நூறு அடி உயரத்தில்… அந்தரத்தில் சிக்கிய 6 சிறார்கள்
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கேபிள் காரில் சிக்கிய ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறார்கள் உள்ளிட்ட 8 பேர்களை மீட்கும் பணியில் தற்போது ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தெரிவிக்கையில், அந்த 8 பேர் குழு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது கேபிள் கார் ஒன்று அறுந்து தரையில் இருந்து 900 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தகவல் வெளியானதை அடுத்து பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் காரை அடைந்துவிட்டதாகவும், ஆனால் மீட்பு நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சுமார் 4 மணிக்கு நேரத்திற்கு பின்னர் தான் மீட்பு ஹெலிகொப்டர் சம்பவயிடத்திற்கு சென்று சேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி பகல் 7 மணிக்கு நடந்த இச்சம்வம் குறித்து உள்ளூர் மக்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, அந்தரத்தில் சிக்கிய மாணவி ஒருவர் கடந்த 3 மணி நேரத்திற்கு முன்னர் மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்தரத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பலத்த காற்று வீசுவதால் மீட்பு நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாகவும், சிக்கலை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தினமும் சுமார் 150 பேர் கேபிள் கார் மூலம் பள்ளிக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர் என உள்ளூர் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment