நோர்வே இளவரசி மெட்டே-மேரிட்டின் (Crown Princess Mette-Marit) மகன் மாரியஸ் போர்க் ஹோய்பி, தம்மீது சுமத்தப்பட்டுள்ள 4 பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
29 வயதான ஹோய்பி, சாட்சியமளிக்கும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். “எனக்கு 3 வயதாக இருந்ததிலிருந்தே ஊடகங்கள் என்னை வேட்டையாடுகின்றன. என் தனிப்பட்ட வாழ்க்கை இதனால் சிதைந்துவிட்டது” எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
தன் மீதான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளை அவர் முற்றாக மறுத்துள்ளார். எனினும், இவை நிரூபிக்கப்பட்டால் அவருக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த வழக்கின் தீவிரத்தை அதிகப்படுத்தும் வகையில், ஹோய்பியின் தாயாரான இளவரசி மெட்டே-மேரிட் தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) இளவரசி நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டது அம்பலமாகியுள்ளது. இது நோர்வே மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலைத் தொடர்ந்து, இளவரசி மெட்டே-மேரிட் தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். இந்த விவகாரம் நோர்வே மன்னராட்சி முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

