வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதி ஒரு பெண்ணா? – 13 வயது மகள் கிம் ஜு யே வாரிசாக அறிவிப்பு!

Screenshot 2024 07 31 062745 670x430 1

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜு யே (Kim Ju Ae), அந்நாட்டின் அடுத்த அரசியல் வாரிசாகத் தயார்படுத்தப்பட்டுள்ளதாகத் தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு (NIS) தெரிவித்துள்ளது. 1948-இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த கிம் வம்சத்தில், முதல் பெண் அதிபராக கிம் ஜு யே பொறுப்பேற்கவுள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2012-ஆம் ஆண்டு பிறந்த ஜு யே, 2022 நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) சோதனையின் போது முதன்முதலில் தனது தந்தையுடன் பொதுவெளியில் தோன்றினார். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதப்பட்டாலும், அதன் பிறகு கிம் ஜு யே பங்கேற்ற ஒவ்வொரு நிகழ்வும் அவர் வாரிசாக அறிவிக்கப்படுவதையே உறுதி செய்தன.

தென் கொரிய உளவு அமைப்பு தனது அறிக்கையில் ஆதாரங்களை முன்வைத்துள்ளது. ஜு யே இப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முக்கியக் கொள்கை முடிவுகளிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

சமீபத்திய இராணுவ அணிவகுப்புகளில், தனது தந்தை கிம் ஜோங் உன்னுக்கு இணையான மிக உயரிய மரியாதை அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அவருக்கு அதிகாரப்பூர்வமான பதவி அல்லது பட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

தற்போது 42 வயதாகும் கிம் ஜாங் உன், 2011-இல் தனது தந்தையின் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தார். வடகொரிய ஊடகங்கள் ஜு யே-வை “மரியாதைக்குரிய மகள்” மற்றும் “அன்பான மகள்” என விவரிக்கத் தொடங்கியுள்ளன. ஒருவேளை ஜு யே அதிபராகப் பொறுப்பேற்றால், அணு ஆயுத வல்லமை கொண்ட ஒரு நாட்டின் தலைமையை ஒரு பெண் ஏற்பது இதுவே முதல் முறையாகும்.

இருப்பினும், வடகொரியா அதிகாரப்பூர்வமாக இந்த வாரிசு அறிவிப்பை வெளியிடவில்லை. கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் (Kim Yo Jong) செல்வாக்கு மிக்கவராக இருக்கும் நிலையில், மகளின் இந்த வளர்ச்சி வடகொரிய அதிகாரப் போட்டியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version