ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ததற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்திருந்த 25% தண்டனை வரியை (Punitive Tariff) நீக்குவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த வரி நீக்கம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்னர் இந்தியப் பொருட்கள் மீது 25% பரஸ்பர வரி மற்றும் 25% தண்டனை வரி என மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி, தண்டனை வரி நீக்கப்பட்டு, மொத்த வரி 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து எரிசக்தித் தயாரிப்புகளை இந்தியா கொள்வனவு செய்யும்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான (2025-2035) புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பிற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன. இது தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் கூட்டுத் தயாரிப்புகளை உள்ளடக்கியது.
இந்த வரி நீக்கத்தால் இந்தியாவின் ஜவுளி, ஆபரணங்கள், தோல் பொருட்கள் மற்றும் கடல்சார் உணவு போன்ற அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறைகள் பெரும் பயனடையும். அமெரிக்காவின் 30 டிரில்லியன் டொலர் சந்தை மீண்டும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குச் சுலபமாகத் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை தரப்பில் “ரஷ்ய எண்ணெயை இந்தியா நிறுத்தப்போகிறது” என அழுத்தமாகக் கூறப்பட்டாலும், இந்தியத் தரப்பில் இது குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்த மாற்றம் படிப்படியாகவே நிகழும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

