சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறங்க முற்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Wing Commander Nirmal Siyambalapitiya) உயிரிழந்துள்ளார்.
நேற்று (நவம்பர் 30) மாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 (Bell-212) ரக ஹெலிகொப்டர் ஒன்று லுணுவில பாலத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அவசரமாகத் தரையிறங்க முற்பட்டு அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர். பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (வயது 41) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த விமானி குறித்துச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு உருக்கமான குறிப்பில்,
“சின்னஞ்சிறு மகனின் அன்புக்குரிய தந்தையான நிர்மால், DITWA புயலினால் தனது உயிரை அகாலமாகப் பலியிட்ட இலங்கையர்களுடன் நேற்றைய தினம் இணைந்துகொண்டார் விலைமதிப்பற்ற இலங்கையின் விமானியாக… நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை வைத்துவிட்டு…”