முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு அரசியல் களம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த புதன்கிழமை (14) மாலை 5:00 மணியளவில், ரணில் விக்ரமசிங்க அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உரையாடலைத் தொடங்கிய ரணில் விக்ரமசிங்க, “விமல், நீங்கள் ஹரிணிக்கு (பிரதமர் ஹரிணி அமரசூரிய) என்ன செய்தீர்கள்?” என நேரடியாக வினவியுள்ளார். சமீபகாலமாகப் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கொள்கைகளை விமல் வீரவன்ச கடுமையாகச் சாடி வருவதை மையப்படுத்தியே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ரணிலின் கேள்விக்குப் பதிலளித்த விமல் வீரவன்ச “கல்விச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கச் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கு என்னால் இடமளிக்க முடியாது, அதனால்தான் அந்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய நேரம் நீடித்த இந்த உரையாடலின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்தும் இருவரும் சுருக்கமாகக் கலந்துரையாடியுள்ளனர். நீண்டகால அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்ட போதிலும், தற்போதைய அரசியல் சூழலில் இருவருக்கும் இடையிலான இந்தத் தொடர்பு அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.