துயிலும் இல்லங்களுக்கு முன்னால் படையினரைக் குவிப்பதால் வீரப்புதல்வர்களை மறக்போமா? – சபையில் சிறிதரன் எம்.பி கேள்விக் கணை

Sritharan 1

” மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் நீங்கள் படையினரைக் குவித்து நினைவேந்தலை தடுப்பதன்மூலம் தமிழ் மக்களுக்கு தமது வீரப்புதல்வர்களை மறக்கும் சூழல் உருவாகிவிடுமா”- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், யுத்த காலத்தில் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடை உத்தரவுகளை பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர். துயிலும் இல்லங்களை இடித்து, சப்பாத்து கால்களுடன் இராணுவம் நடமாடுகின்றது. துயிலும் இல்லங்களை இடிப்பதன்மூலம் தமிழ் மக்கள் தமது வீரப்புதல்வர்களை மறக்கக்கூடிய சூழல் உருவாகிவிடுமா?

2016 முதல் 2019 வரை மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஒரு பேரணி கூட செல்லவில்லை.

எனவே, இலங்கை அமைதி பூங்காவாக மாறவேண்டுமானால் நினைவேந்தல் நடத்தும் உரிமைக்கு அனுமதி வழங்கும் அறிவிப்பை பகிரங்கமாக விடுக்கவும். அதைவிடுத்து அடக்கி ஆள முற்பட்டால் அமைதி ஏற்படாது.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version