” நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்கள் எங்கே? 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலாவது நிவாரண முன்மொழிவுகள் இடம்பெறுமா” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நாடாளுமன்றத்தில் இன்று 27/2 ஆம் நிலையியற்கட்டளையின்கீழ் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
” நாட்டில் இன்று எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரிசிக்கு வரிசை, சீனிக்கு வரிசை, எரிபொருளுக்கு வரிசை, சமையல் எரிவாயுவுக்கு வரிசை என அந்தப்பட்டியல் நீள்கின்றது.
மாற்றத்துக்காகவே 69 லட்சம் பேர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? மீண்டும் 70-77 யுகத்தை நோக்கி மக்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்களும் இன்னும் வழங்கப்படவில்லை.” -என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.