திருமண நிகழ்வு! – நாட்டில் மீண்டும் கொவிட் கொத்தணி

Corona

மினுவாங்கொடை, காமரகொட பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களின் திருமணத்திற்குப் பிறகு அப் பிரதேசத்தில் கொவிட் 19 கொத்தணியொன்று உருவாகியுள்ளது.

இதில் மணமகனான மூத்தசகோதரர் உட்பட 26 பேருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரனும், தம்பியும் ஒரே நாளில் இரண்டு மணப்பெண்களை அழைத்து வந்திருந்தனர்.

இரண்டு திருமணங்களும் சந்தலங்காவ பிரதேசத்திலுள்ள தேவாலயத்தில் இடம்பெற்றது.  இரண்டாவது நாளான நேற்று திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் திருமண வைபவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் திருமண நிகழ்வில் இரு தரப்பினரிலும் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.

இதில் மணமகனான மூத்த சகோதரர் மற்றும் ஐந்து பேரை முதல் முதலில் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் கண்ட மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், அந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 28 பேரை உடனடியாக அன்டிஜென் சோதனைக்குட்படுத்தினர். இதில் 26 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களில் சிலர் சுகாதார ஆலோசனைகளை புறக்கணிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலர் அன்டிஜென் சோதனையை புறக்கணித்து தங்கள் கடைகளைத் திறந்து வைத்திருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version