“ஒரு இலட்சம் ரூபாவையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதி அமைச்சர் அலி சப்ரி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.”
– இவ்வாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல்போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச்சான்றிதழோ தேவையில்லை எனக் கூறியிருந்தோம்.
அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென ஏன் அக்கறை வருகின்றது. ஒரு இலட்சம் ரூபா நிதியை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கைச் செலவைக் கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் நாம் போராடிக் கொண்டிருந்தோமே தவிர ஒரு இலட்சம் ரூபாவுக்காகப் போராடவில்லை.
போர் முடிவடைந்து 13 வருடங்களைக் கடந்தும் எமது உறவுகளைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம். உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கி உறவுகளைத் திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கின்றார். எமது உறவுகள் நிதிக்காகப் போராடவில்லை; நீதிக்காகவே போராடுகின்றோம்” – என்றார்.
#SriLankaNews