கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை: பொத்துவில் வர்த்தக நிலையத்திற்கு ரூ. 1 இலட்சம் அபராதம்!

articles2F7n4ENzjaUwYHj2nMIZLh

அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றத்திற்காக, பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலைய உரிமையாளருக்கு, பொத்துவில் நீதவான் நீதிமன்றம் ரூ. 100,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரி சாலிந்த நவரத்தனவினால் தாக்கல் செய்யப்பட்டது.

1500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை ரூ. 130 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை ரூ. 150 இற்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (அக்டோபர் 21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் நீதிமன்றத்தின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டது.

தண்டனை வழங்குவதற்கு முன்னர், நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான இஷட்.எம். ஸாஜீத் மற்றும் என்.எம். றிப்கான் ஆகியோர், இந்த குற்றத்திற்காக ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட நீதவான், குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ. 100,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Exit mobile version